மீண்டும் மோடி! தகர்ந்த எதிர்ப்புகள்

Published on

கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின்னர் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார் மோடி. வழக்கம்போல அவரது படங்களைப் போட்டு மீம்ஸ் செய்து எதிர்க்கட்சிகள் மகிழ்ந்து கொண்டிருந்தபோது ஓசைப்படாமல் நாட்டின் பெரும்பகுதி மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தனர். சென்ற 2014 தேர்தலில் பெற்றதை விட கூடுதலான இடங்களைப் பெற்றதன் மூலம் இந்தியாவில் ஒரு சில இடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் மோடி அலை வீசியது என்பது உறுதியாகிவிட்டது. மோடியின் வெற்றியை எதிர்பார்த்தவர்கள் கூட இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

2014 - ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றது 44 இடங்கள்தான். இந்நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் வரிசையாக தன் வசம் இருந்த மாநிலங்களை ஒவ்வொன்றாக இழந்து வந்தது. ஒரு நம்பகமான எதிர்க்கட்சி என்ற நிலையில் கூட செயல்படாமல் இருந்த காங்கிரசுக்கு கடைசி ஓராண்டு கை கொடுத்தது என்றே
சொல்லலாம்.  கடைசியாக நடந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. புதிய உத்வேகத்துடன் காங்கிரஸ் செயல்பட்ட நிலையில் பாஜக பெறும் இடங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் எதிரிகளாகச் செயல்பட்டுவந்த பகுஜன்சமாஜ் - சமாஜ்வாடி கட்சி வைத்த கூட்டணி மிக முக்கிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அகிலேஷும் மாயாவதியும் அத்தை - மருமகன் என்ற புதிய உறவு முறையுடன் பிரசாரம் செய்தார்கள். இந்தக் கூட்டணியால், பாஜக உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்ற 72 இடங்கள்  பெற முடியாது, இது குறையலாம் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல் இந்தி பேசும் பிற மாநிலங்களான ம.பி., ராஜஸ்தான், சத்திஸ்கர், பீஹார் போன்ற மாநிலங்களில் ஓரளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவுகள் இதற்கு நேரெதிராக வந்துள்ளன. உபியில்
சென்ற தேர்தலை விட பதினைந்து இடங்களை மட்டுமே மாயாவதி& அகிலேஷ் கூட்டணியால் குறைக்க முடிந்தது. பிற வடமாநிலங்கள் முழுமையான வெற்றியைத்தந்தன.

இதில் ஆச்சரியகரமான வெற்றி என்பது மேற்குவங்கத்திலும் ஒடிசாவிலும் பாஜக பெற்றிருக்கும் இடங்கள். இடதுசாரிகள், மம்தா ஆகியோரின் கோட்டையான மேற்கு வங்கத்தில் 18 இடங்களை வென்றெடுத்தது பாஜக.

அங்கிருந்து தெற்கே தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் கைவிட்ட நிலையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்தது. 25 இடங்கள் என்பது பெரிய எண்ணிக்கைதான்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி குளறுபடிகளும் பாஜக அரசின் பெரிய தடுமாற்றங்களாகக் கருதப்பட்டன.  பணமதிப்பிழப்பினால் பயனேதும் விளையவில்லை என்றாலும் டிஜிட்டல் பயன்பாட்டுக்குப் பலர் வந்தார்கள். ஜிஎஸ்டியால் பல சிறுதொழில்கள் அடிபட்டன. ஆனாலும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இதில் மாறுதல்கள் செய்யப்பட்டன. இடையில் ரபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டதால், குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்கு ஆதரவு தர ஊழல் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்       சாட்டு பூதாகரமான நிலையில் பாஜகவின்
செல்வாக்கு சரிந்ததாகக் கருதப்பட்டது.

ஆனால் மோடி -அமித் ஷா கூட்டணி இதை நேருக்கு நேர் எதிர்கொண்டனர்.'சௌக்கிதார்
சோர்( காவலாளியே களவாளி)' என்று காங்கிரஸ்
சொன்னபோது அதையே தனக்கு வலுப்படுத்த
‘சௌக்கிதார்' என்று தன்னை மோடி அழைத்துக்கொண்டார். இணையத்தில் இருக்கும் எல்லா பாஜகவினரும் தங்கள் பெயருக்கு முன்னால் இந்த அடைமொழியை வைத்துக்கொண்டனர்.

இந்த இடைவெளியில் நடந்ததுதான் மோடியின் பிம்பத்தை பெருமளவுக்கு வடமாநிலங்களில் உயர்த்தக் காரணமான பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்! இந்தத் தாக்குதல் நடந்தபிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதிய கட்டுரையாளர்  அங்கிலேஷ்வர் அய்யர், "பாஜக இதன் மூலம் 70 இடங்கள் அதிகமாகப் பெற வாய்ப்புகள் உள்ளன,'' என்றிருந்தார். இது பலித்துவிட்டது.

"இந்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் பாஜகவால்
விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பின்மை, ரபேல் ஊழல் போன்றவற்றை சமாளிக்கவே முடியவில்லை. ஆனால் பாலகோட் தாக்குதல், பாஜகவுக்கு சாதாரண வாக்காளர்கள் முன்பு உங்களுக்கு வலிமையான மோடி வேண்டுமா? ராகுல் வேண்டுமா என்ற கேள்விக்கு முடிவெடுக்க வைத்தது,'' என்பது தேர்தல் கணிப்பாளரான யோகேந்திர யாதவின் கருத்து.

 இந்துத்துவமா? தேசியவாதமா? இதில் எதை பாஜக இந்தத் தேர்தலில் முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்தது என்றால், தேசியவாதம்தான். இதில் தேசியவாதம் என்ற விஷயத்தை காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டது. இந்திரா காந்தியின் பேரனால் பாகிஸ்தானை இரண்டு துண்டாக்கிய தன் பாட்டியின் பெருமையை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை!

கடந்த தேர்தலில் வடோதராவிலும் வாரணாசியிலும் போட்டியிட்ட மோடி, வாரணாசியை வைத்துக் கொண்டு வடோதராவை  ராஜினாமா செய்திருந்தார். வாரணாசி என்பது இந்துத்துவத்தின் மையக் குறியீடாக இருப்பது. ஆனால் வாரணாசியில் போட்டியிடுவதுடன் மோடி இம்முறை நிறுத்திக்கொண்டார். பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் கொடுத்த ஆதரவுத் தளத்தை தேசியவாதத்துடன் கலந்து வலிமையான பிரதமர் வேட்பாளராக அவர் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். சுப்பிரமணிய சாமி போன்றவர்கள், அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதை முன்னிலைப் படுத்தவேண்டும், வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக அயோத்திக்குப் போய்வரவேண்டும் என்று கோரிய இந்துத்துவ ஜிம்மிக்குகளை அவர் இம்முறை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் விட்டுவிட்டார்!

என்னதான் பெரிய அளவில் எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளானாலும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டுகள் அமைதியான ஆண்டுகளாகக் கழிந்தன. காஷ்மீரில் புல்வாமா தாக்குதல், அவ்வப்போது நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் ஆகியவை ஒரு சில கரும்புள்ளிகள். முன்பு நகர்ப்புறங்களில் நடந்துகொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் அறவே இல்லை!

அமித் ஷாவின் கூட்டணி வியூகங்களையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சதா
சண்டை பிடித்துக்கொண்டிருந்த சிவசேனாவை மகாராஷ்டிராவில் சரிசெய்தார். பீஹாரில் ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ்குமாருடன் இறங்கிப் போய் சமாதானம் செய்து சமமான இடங்களில் நிற்க ஒப்புகொண்டார். அசாமில் அசாம் கணபரிஷத்தை இழுத்து கூட்டணி வைத்தது இவையெல்லாம் ஷாவின் வெற்றி வியூகங்களாக அமைந்தன.

தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பே எதிர்க்கட்சிகள் தோல்வி முகம் கண்டுவிட்டன என்றுதான்
சொல்லவேண்டும். "அமேதியிலிருந்து வயநாடுக்கு ராகுல்காந்தி நகர்ந்தபோதே அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது'' என்று அந்திமழையிடம்
சொல்கிறார், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன். "நாடு முழுக்க மக்களுக்கு நேரடியாகப் போய்ச்சேர்ந்த பல நலத்திட்டங்கள், நேரடியாக வங்கிக் கணக்குகளில் போய்ச்சேர்ந்த நிதி உதவிகள், தேசப்பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளின்  எதிர்மறைப் பிரச்சாரங்களை மக்கள் ரசிக்காதது ஆகியவை பாஜகவின் இமாலய வெற்றிக்குக் காரணங்கள்'' என்கிறார் அவர்.மோடிக்குப் முன்னால் இருந்த முக்கியமான பிரச்னை வேலை இல்லாத் திண்டாட்டம். ஆனால், அதை முக்கியமான விஷயமாக எதிர்க்கட்சிகளால் ஆக்கவே முடியவில்லை.

"நியாய் என்ற ஒரு விஷயத்தை காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் முன்வைத்தது. அதாவது கிராமப்புற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72000 ரூபாய் வழங்கப்படும். ஆனால் இந்த அறிவிப்பு அவர்களைப் போய்ச்சேரவில்லை. ஆனால் மாறாக, யாரிடம் வரிவசூலித்து இந்த விவசாயிகளுக்குப் போய்ச்சேருமோ அந்த மேல்தட்டு மக்கள்தான் இதை கவனித்தார்கள்! வாக்குகளைச் சேர்ப்பதற்கு பதில் இது குறைத்துவிட்டது! அத்துடன் முதல்முறையாக நாடு முழுவதும் இருக்கும் உயர்
சாதி வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்குப் போய்ச்சேர்ந்திருக்கின்றன,'' என்று கணிக்கிறார், பத்திரிகையாளர் சேகர் குப்தா. அதேசமயம் இடைநிலை சாதி வாக்குகளும் அவ்விதமே கூடியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் அவர் அங்கே போகவே இல்லை! அவருக்கு எதிராக கடந்த முறை ஆம் ஆத்மியின் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் போட்டி கொடுத்தார். இந்த முறை ஒரே ஒரு ஸ்டார் வேட்பாளரையும் எதிர்க்கட்சிகளால் அங்கே நிறுத்தமுடியவில்லை! அவருக்கு எல்லா வழிகளையும் திறந்துவிட்டனர்!

''காங்கிரஸ் கட்சி தங்களுடைய இலக்காக முன்வைத்தது 132 இடங்களை வெல்லவேண்டும் என்பதைத்தான். இதைத்தான் மபி முதல்வர் கமல்நாத்தும் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் சொன்ன செய்தி என்ன? நீங்கள் முழுமையாக வெல்லவேண்டும் என்று நினைக்கவில்லை என்பதுதானே?'' என்று தி பிரிண்ட் இணைய தளத்தில் ஒரு பத்திரிகையாளர் கேட்டிருப்பது உண்மை என்றே தோன்றுகிறது.

ஜுன், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com